காதல்




காதல் தந்த வலியும், 
நட்பு தந்த ரணமும் மறையும், 
அன்பெனும் மருந்தைத் தன்னுள் கொண்ட 
நல் மனமொன்று கிட்டுமெனில்.







முதல் காதல் முற்றும் மறக்க முடியா மூலக் காதல், 
இடைச் செருகலாய்க் காதல் பல வரினும் 
கனவிலும் கரையா தலைக் காதல். 
மண்ணில் தலை சாயினும்
மரணம் தழுவா மூத்த காதல்.








உன் முதுகுல தவழுது குட்டை முடி, 
என் முகத்துல பரவுது சந்தோச நெடி, 
மனசுல வளருது காதல் செடி,  
உள்ளத்தில் உள்ளத நல்லா படி, 
நாம இணை சேருவோம் நல்ல படி.





காற்றின்றி மூச்சில்லை, 
மூச்சின்றி உயிரில்லை,
உயிரின்றி உடலில்லை, 
உன் நினைவன்றி என் உள்ளத்தில் ஒன்றுமில்லை. 







என் இதயமெனும் மூங்கில் குழலில் நுழைந்தாய் கானக் காற்றாய், இதயம் உருக்கும் இன்பக் காற்றாய் வா, இதயம் இறுக்கும் சோகக் காற்று நமக்கெதற்கு காதலியே.


இணைசேர்வோம், அன்பைத் துணை கொள்வோம், இன்பத்தை நமதாக்குவோம், துன்பத்தைத் தூரமாக்குவோம். புரிதலில் பிரிதலைப் புறந்தள்ளுவோம்.



வாழ்வின் விளக்கம் அன்பொன்றே என்று சான்று பகர்வோம், பசித்திருப்பினும் மனதால் அன்பைப் புசித்திருப்போம், விலகலுமில்லை, விரக்தியுமில்லை களிப்பொன்றே காண்போம் நம் காதல் வாழ்வில்.



                                                                              




யாருமறியா புது நிலவில் குடி புகுவோம் பெண்ணே வாழ்வைக் கழிக்க, வாழ்வில் களிக்க. பூமியின் சந்ததி போலன்றி கபடற்ற சந்திர சந்ததி தருவோம், அமுது தமிழில் கல்வி கொடுப்போம், சூதில்லா சுத்த தமிழ் இன்ம் பெருக்கி சுதந்திரமாய் வாழ்ந்திடுவோம் தமிழ்த் துரோகிகளின் வாச்மின்றி.






காதலன் தந்த குறுந்தகவல் மார்பில் மறைந்திருந்த அலைபேசிக்கு உதறல் கொடுத்து இதயத்துக்கு உணர்ச்சியும் கொடுக்குது. அலறல் இல்லா உதறல் அலைபேசியே, இருவர் காதலில் உள்புகுந்த நீயொரு காதல் கேப்மாரி.







மின்னலின் மின்சாரம் கண்களில் தேக்கி என்னுள் ஊடுறுவு என்னவளே, சக்தி பெறுகிறேன். நித்திரை துறப்போம், முத்திரை பதிப்போம் புத்திர வரவுக்காய்.

வடக்கென்ன தெற்கென்ன கிழக்கென்ன மேற்கென்ன எத்திசையும் செல்வோம் இளமையைச் செலவு செய்வோம் இனிதாய்த் திரும்புவோம்.

வயோதிகத்திலும் வாலிபம் காண்போம், உறவு தந்த உரிமையில் அன்பில் உறுதி பெறுவோம், எப்போதும் இணைப்பிலிருப்போம், இறுதி வரை இணைந்திருப்போம்.





உறக்கத்திலும் உறங்கா உன் நினைவு தருது கிறக்கம். கிறக்கம் தந்த கன்னியே சிறிது இரக்கமும் தா துணை சேர





முத்தம் பகிர்வதற்கும் முழு உடல் பெறுவதற்கும் மட்டுமன்று காதல், இதய பாரத்தை இன்னொரு இதயம் பெறுவதே இறுக்கக் காதல்.





நீல மேகம் கருத்தது, பெண்ணே உன் அழகு முகம் கண்டு. பொறாமையில் பொங்கி மழையையும் பொழிந்தது. மழை வேண்டி யாகம் வேண்டாம், பெண்ணே உன் முகம் காட்டு மேகத்துக்கு.







பீன்ஸ் உடம்புல ஜீன்சு, ஸ்மார்ட் போன்ல தங்கிலீஷு, மயங்கிப் போயி மாலுக்குப் போனான் பர்சுல மாலு காலி. காசு போனா வரும் காதல் வருமா தமிழ்த் தம்பி, கெட்டியாப் புடிச்சுக்கோ கெட்டிக்காரப் பையா.


தூர இருந்தாலும் தொலைவில் தெரிந்தாலும் உன் மணம் நுகர்கிறேன், மன இணைப்பால் வரும் மணமோ இது மங்கையே






உறவை இறுக்கும் அன்பு தேய்ந்து தொலையாவிடில் உளப் பிணைப்பும் உடல் இணைப்பும் இறுதி வரை இருக்கும்.






உன் கருவிழி வழி நீர் கண்டு கலங்கியதே என் விழி, காதலுக்கு அடையாளம் கண்ணீரெனில் கடலில் மூழ்குமே இவ்வுலகம்


பேசிப் பேசி சோர்ந்திடும் இதழ்கள் நான்கிற்கு களிப்பு தரும் முத்த விளையாட்டில் இனிப்பின்றி கசப்பேது, குளிர்ச்சியன்றி வெப்பம.







இளஞ்சூட்டுக் காற்றாய் எனைக் கடக்கும் குமரியே, கிட்ட வந்து குளுமை தா குளுமையில் குதூகலம் தா. தென்றலுமல்லாது, வாடைக்காற்றுமல்லாது காதல் காற்றாய் வா என்னில் மையம் கொள், சுற்றும் காற்றாய்ச் சுழலுவோம் அன்பு மேகமதில்.


உறவென்பதொரு ஊஞ்சல், தேடலும் நாடலும் கயிறுகள். நாடல் குறைந்து தேடல் தொலைந்து இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ சுகமான உறவெனும் ஊஞ்சலாட்டம், பிரிவெனும் வீழ்தலும் உள்காயமும் தரும்

அன்பதனை அளந்து தர அதென்னெ மின்சார மீட்டரா, அளவில்லாமல் கொடு, என் அன்பனைத்தையும் எடு அதிகாரமின்றி, என்னவளே.




விண்ணில் நீ விமானத்தில், மண்ணில் என் மனம் மயானத்தில். தரையிறங்கு, மயானமான மனதில் உன் மனம் இணைத்து புத்துயிர் கொடு, மனம் பிணைந்து வாழ்வோம் விண்ணும் மண்ணுமல்லா ஓரிடத்தில்

முகநூலில் பெண்களின் உள்டப்பி போய் உள்குத்து வாங்கியோர் பலர். முகநூல் சுவற்றில் மோது உள்காயமுமில்லை, வெளிக்காயமுமில்லை.

தேடலும், தேடியது கிட்டியதும் மனக் கிளர்வும், மனக்கிளர்வில் மகிழ்வும், குறுஞ்செய்தியில் குதூகலிப்பும், அலைபேசிப் பேச்சில் ஆனந்தமும் அடையும் உள்ளங்களின் உடல்கள் இணைந்தால், காமம் தணிந்தால், காதல் மயக்கம் மாயமாய் மறைந்து, குதூகலிப்பு காணாமல் போய், மனிதப் புத்தி மறைந்து மரம் மரமாய்த் தாவும் குரங்கின் புத்தி வந்து கூத்தும் கும்மாளமுமே வாழ்வாகிறது பலருக்கு.

அன்பின் குறுக்கே ஆணவமெனும் பெருஞ்சுவர் வந்தால், காதல் கருகி, மனம் மறத்து, பாசம் பறிபோய் வாழ்வே வீணாகும்

அழகோ அழகற்றதோ, பணமுண்டோ பணமில்லையோ, உயர் படிப்போ கடைநிலைப் படிப்போ, பகட்டோ பகட்டில்லையோ, காதலென்றாலது அன்பின் பறிமாறுதலே. பரிமாற்றத்தில் தாமதமும், தடுமாற்றமும் ஆழ்ந்த காதலை அறைகுறைக் காதலாக்கி விலகலில் விட்டு விடும்.





அன்பில் அடித்தளமிடும் காதலுக்குத்தான் எத்துணை கவிதைகள், கவிதைக்கேது பஞ்சம், மெய்க்காதலுக்கன்றோ பஞ்சம்

ஆழப் பதிந்த அன்பில் ஊடலன்றி உண்மைப் பகையில்லை, நெஞ்சில் நிறைந்திருப்போரைப் பிறர் வஞ்சம் பிரிக்கக் கூடுமோ

அலங்கார ஆடையில், மேனி வனப்பில் பகட்டாய் நீ பவனி வந்தாலும், அமெரிக்க ஆங்கிலம் பேசி தனித் தோற்றம் தந்தாலும், வெளித் தோற்றத்தில் வசீகரிக்கும் உன் உள்ளம் தேடுவதோ விலை மதிப்பில்லா மெய்யன்பே.                      அன்புக்கும் ஆசைக்கும் வேறுபாடு அறிகிறாய்தேடுதல் தொடர்கிறது

ஆயிரம் நிகழ்வுகள் சுற்றி நிகழ்ந்திடினும் என் நினைவென்னவோ நின்னைச் சுற்றுதே

என் விழி வலையில் விழுந்த உனதுருவம் உள்ளத்திலும் உறைந்ததே, விடுதலைக்கு வழியில்லையே

இணையதள அறிமுகமே இத்துணை ஈர்ப்பெனில், இனிய முகம் நேரில் காணின் எத்துணை இனிப்பும் இன்பமும். பல வகைக் காதலில் இணையதளக் காதலிது.

முகநூலில் காணும் பல முகங்களிலும் உன் ஒரு முகமே முன்னிற்கிறதே, மனதிலும் மையம் கொள்கிறதே, இணையதளம் இணைத்த இந்த உறவு இறுக்கம் பெறுகிறதே, இதயங்களை இணைக்கும் இணையதளமே எப்போதும் இணைப்பிலிரு.





செல்லில் அன்புச் சொல் தந்து உன் பின் செல்ல வைத்து, மெசேஜில் மன மசாஜ் தந்து மயங்கச் செய்தவளே எங்கே  நீ? செல்லில் சொல்லில்லை மொத்தத்தில் இணைப்பிலில்லை. புது இணைப்பில் சொல்ல புதுச் சொல் தேடிப் புறப்பட்டாயோ புதுமைப் பெண்ணே

தனிமை தினம் இனிமை தருகிறதாம் சிலருக்கு, தனிமையைத் தனிமைப் படுத்தி துணை நாட விருப்பம் வரினும் உள்ளத்திலேனோ உறுதியில்லை

விரும்புவது விலகிப் போவது போலொரு மாயத் தோற்றம் தந்து தொடர்பிலுமிருந்தால் அது விருப்ப விலகலல்ல, வெறுப்பு விலகலுமல்ல, தொடர்ந்து தொடர்பிலிருந்தால் மாயத் தோற்றம் மறைந்து உண்மை உறவு உறுதிப்படும், இணைப்பிலிரு, மன இணைப்பு சாத்தியமாகும்.

உறவெனும் ஒரு உணர்வில் எத்துணை ஏக்கங்களும், தொலைந்த தூக்கங்களும், எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும், நேர்காணலும், காணலின் பின் பிரிவும், பரிவும், பற்றும், அலைபேசி அளவளாவலும், குறுஞ்செய்திக் குசும்பும், முகநூல் முனகலும் இன்னும் என்னென்னவோ. உறவை உருக்குலைக்கும் பணமும் பதவியும் அநியாயமாய்ப் பெற்றவனுக்குக் கிட்டுமோ உறவின் உண்மைப் பலன்.


நல்லன்பிற்காய் ஏங்கும் இதயத்தில், இறுக இடம் பிடிக்கும் நட்பும் காதலாய் மாறலாம்.






 கட்டிளங்காளையரைக் கண்ணெதிரே காணினும், அழகர்களாயிரம் அணிவகுத்திடினும், இதயத்தில் இறுக நுழைந்த நின் முகமன்றோ கண்ணில் கலந்து கனவிலும் தெரிகிறது. கவர்ச்சிக் கன்னியரென் கருத்தைக் கவரவில்லை உருவ அழகு உள்ளத்தைத் தொடவில்லை, உன் நினைவொன்றே மனதில் முழுகியதே. இதுதான் காதலோ

அன்பென்பது ஆழப் பதிவது, ஈர்ப்பென்பது இடைச் செருகலே, இடையிடையே தலை காட்டி மறந்துவிடும் மறைந்தும்விடும், இருப்பினும் ஈர்ப்பில்தானே உலகமே உழல்கிறது

அன்பிருந்தால் ஆர்வம் ஆர்ப்பரிக்கும், நாடு கடந்து கண்டம் கடந்து கால் பதித்தினும் கவர்ந்த இதயம் தொலையாது, உண்மை அன்பால் வரும் உன்னத ஈர்ப்பிது, காதலில் உச்சத் தீர்ப்பிது

உடல் வனப்பினும் உள வனப்பில் உருகுவதே உண்மைக் காதல்

அக்காலத்திலும் காதல் இக்காலத்திலும் காதல் எக்காலத்திலும் காதல். அன்னம் விடு தூது, புறா விடு தூது, தோழி விடு தூது, கடிதக் காதல், தொலைபேசிக் காதல் இப்ப அலைபேசிக் காதல். தூதெல்லாம் போய், கடிதமும் போய், தொலைபேசியும் போய் கடிதம் செய்த வேலையை முகநூலும், தொலைபேசி செய்த வேலையை அலைபேசியும் அருமையாய்ச் செய்கிறது. காதலென்னவோ ஒண்ணுதான், அது ஸ்பீடாப் போனாலும் மெதுவா போனாலும் பரிமாற்றப் படுவது அன்பே

அன்று காதலை வளர்த்த காகிதமும், நேர்காணலும், தொலைபேசியும் தொலைந்து இன்று அலைபேசி, முகநூல் என முகம்காணாக் காதலில் முழுகுவோரே தெய்வீகக் காதலர்களோ

எந்தப் பெயர்களும் மனதில் ஒட்ட மறுத்து அட்டை போல் ஒட்டியதே உன் பெயர் , மனித உருவங்களில் உனதுருவம் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறதே, அன்பென்பதின் அகராதி நீ, ஆழ்கடலினும் ஆழம் உன் நேசம், நின் வருகையின் பூரிப்பில் காத்திருத்தலின் வேதனை காணாமல் போகுதே. காதலின் களிப்பென்பது இதுதானோ

காமம் படராக் காதலும், கண்கள் கலங்கா உண்மைப் பிரிவும், தழுவப் படா தேகமும், பற்றில்லா மனிதனும், அன்பு கொடா தாயும் உலகில் இல்லை.

மெல்லிய மோகத்தினூடே, கடுகளவுக் காமத்தினூடே கனிந்த காதல் பலருக்குக் கசந்து போவதேன், கண்டடைந்த காமமும், முழுகியெழுந்த மோகமும் அன்பார்ந்த காதலின் ஒரு அங்கமே என உணராதவற்கே

காதலொரு எதிரின ஈர்ப்பு, ஈர்ப்பின் பின் பிடிப்பிருப்பின் காதல் பாதையில் காண்பதும் சுவைப்பதும் இனிப்பு, பிடிப்பில்லாக் காதல் காலப்போக்கில் தருவது உவர்ப்பு மற்றும் கசப்பு

அன்பு ஆறாய்ப் பெருகி, பாசத்திலும், நேசத்திலும் மயங்கிடின், அன்புக் காதலர்க்கு அனுதினமும் காதலர் தினமே.



உமிழ்நீரை உறிந்து காதலுணர்வு மிகுதியில் அமுதென்றழைக்கும் காதலர்க்கு காதலே எல்லாம்.

பெண்ணிடம் உண்மை உரை, உறைக்கும், அவள் அழகு சம்பந்தப்படாத வரை, அழகினில் உண்மை உறைத்தாலோ அடிவயிற்றுச் சாபமிட்டு உனை அகதியாக்குவாள்

அழகில் வருவது ஆர்வக் காதல், அறிவில் வருவது முதிர்ச்சிக் காதல், முகம் காணாக் காதல் முகநூல் காதல். எக்காதலாயினும் ஈர்ப்பும், அன்பும் இரு விழிகள்

அழகோ அழகற்றதோ, பணமுண்டோ பணமில்லையோ, உயர் படிப்போ கடைநிலைப் படிப்போ, பகட்டோ பகட்டில்லையோ, காதலென்றாலது அன்பின் பறிமாறுதலே. பரிமாற்றத்தில் தாமதமும், தடுமாற்றமும் ஆழ்ந்த காதலை அறைகுறைக் காதலாக்கி விலகலில் விட்டு விடும்.

அன்பின் குறுக்கே ஆணவமெனும் பெருஞ்சுவர் வந்தால், காதல் கருகி, மனம் மறத்து, பாசம் பறிபோய் வாழ்வே வீணாகும்


உறவு ஊக்கம் தருமெனில், மார்க்கம் காட்டுமெனில்ஏக்கம் தீர்க்குமெனில், தீர்க்கமாய்ப் பிணைந்திரு அவ்வுறவில். ஆணவமற்ற, அதிகாரமற்ற அன்பு ஏராளமாய்க் கிட்டினால் தாராளமாய்த் திருப்பியளி அன்பினை.

இலையுதிரலாம் எனதன்பு உதிராது, கிளை முறியலாம் என் காதல் முறியாது, காவிரியில் தண்ணீர் வரலாம், உன் விழியில் கண்ணீர் வரலாமோ, மின்சாரம் தடை படலாம் நின் காந்தக் கண்ணின் கதிர்வீச்சு தடை படுமோ

என் காதல் கவிக்கு வலுவூட்டுதே உன் எழில் முகம்

அன்பைத் தொலைத்து அன்பைத் தேடும் மனங்களே, தேடி வருமோ உண்மையன்பு, வாழ்வு முழுதும் தேடல் தேடல், தேடித் தேடி தேய்ந்து ஓய்ந்து போகும் மனங்களே தேடுங்கள் தேடினால் கிட்டாதது ஏதுமில்லை

நாம் நேசிக்குமொரு இதயம் நம் வார்த்தைகளால் புண்பட்டதை எண்ணி கலங்குவோமானால் நாம் பண்பட்டவராவோம்

கண்களில் உருவம் பதிந்து இதயத்தில் உள்ளம் பதிவதே காதல்

காதலென்பது ஆதிக்கமே. அன்பிலாதிக்கம், பாசத்திலாதிக்கம், நேசத்திலாதிக்கம், உள்ளத்திலாதிக்கம், உணர்விலாதிக்கம்
 ஆதிக்க சக்தி என்பது இதுதானோ





புரிதலில்லையேல் பிரிதலெண்ணம் வலுப்பெறும். பரிவினும் பிரிவை விரும்பும் மனங்களே காதலெனும் ஆட்டத்தில் தோல்வியுறும். அன்பை அளக்காதே. இந்தியாவே தாராளமயமாகிறது, உனதன்பும் தாராளமாகட்டும்

தானும் உருகி எதிரினத்தையும் உருக்குவது காதல் களம், உருகி உருகி இருவரும் உருக்குலைந்து போவது குடும்பக் களம்

முற்றிலும் மறக்க இயலா முதல் காதல் துறந்து, கரம் பிடித்த கைகளுடன் இல்லறத்தில் இணைந்து, செல்வத்தில் நாட்டம் வந்து, பொருளீட்டி, மக்கட்செல்வமும் கிடைக்கப் பெற்று, சொந்த பந்தங்கள் மேல் பற்றுக் குறைந்து, தன் குடும்பமென்றாகி அதிலும் குழப்பம் வந்து, ஆணவமும் அதிகாரமும் தலைதூக்கி, முதுமையில் அனைத்தும் மறந்து மறைந்தும் போகிறான் மனிதன்

அன்புச் சிறையில் விழுந்தால் விழியசைவும் இசை பாடுதல் போலொரு பிரம்மை, நடையானது நாட்டியமானது போலொரு மாயை, அலைபேசியில் வார்த்தைகள் அருவித் தண்ணீராய் ஆகும் அதிசயம். மதுவினும் மயக்கம் தரும் காதல் கனிந்தால் மென்மேலும் மயக்கமே.


மனமெங்கும் நிலைத்திருக்கக் குணமங்கு வேண்டும். பன்மடங்கு அழகிருந்தும் வங்கி வங்கியாய்ப் பணமிருந்தும் நற்குணமில்லா பந்தம் பாதியிலே பிரிந்தேதான் போகும்.

உறவில் உரிமையுண்டு, உரிமையில் அதிகாரமும், ஆணவமும் இல்லையெனில், அன்பொன்றே அரசாட்சி செய்யுமெனில் அக்காதலே காலத்தை வெல்லும் காதல்.

உரு மாறினாலும் அன்பெனும் கரு கரையாமலிருப்பதே காதல். உடலில் ஊடுருவ எத்தனையோ ஆயுதங்கள், உள்ளத்தில் ஊடுருவ வல்லது அன்பெனும் ஆயுதமொன்றே.

எதிரின ஈர்ப்பதனை எப்படி உரைப்பது, பார்த்தவுடன் ஈர்ப்பு, பழகிய பின் ஈர்ப்பு, உரையாடலில் ஈர்ப்பு, கண்ணியத்தில் ஈர்ப்பு, முகநூல் கடலையில் ஈர்ப்பு, இப்படி ஈர்ப்போ ஈர்ப்பு. ஈர்ப்பில்லா உயிரினமேது உலகில்.


பருவத் திரட்சியில் பொங்கும் காமக் காதல், பொங்கிய காமம் அடங்கி காதல் முதலிலும் காமம் கடைசியிலும் இடம் மாறும் கட்டுக்கோப்புக் காதல், காமமும் காதலும் கசந்து நற்துணை தேடும் முதிர்ச்சிக் காதல். காதலின் பல காரணிகளில் வயது ஓர் முதன்மைக் காரணி.

மீன்கொத்திப் பறவையாய் என் இதயம் கொத்திப் போனவளே சிதைத்துவிடாதே, அது உன்னுயிரில் கலந்த என்னுயிர். மரம்கொத்திப் பறவையாய் என் மனம் கொத்தும் மங்கையே கூடு கட்டுகிறாயோ என் மனமெனும் மரத்தில்.





தத்துவம் தெரியாது பித்தலாட்டமும் புரியாது காதல் தாலாட்டு ஒன்றில் மட்டும் களித்திருக்கும் இளங்காதல் ஒரு இன்பக் காதல். மணம் முடித்தும் தாலாட்டு தொடருமெனில் அதுதான் தெய்வீகக் காதலோ. காதல் ஊஞ்சல் முறிந்து தடாலெனக் கீழே விழுந்து தாலாட்டும் தடம் புரண்டு சோகப் பாடலாய் மாறுகிறதே பலரின் காதல் வாழ்வில். விந்தையான காதல் வாழ்வு, வியக்க வைக்கும் காதல் வாழ்வு.
  
இருமனங்கள் இணைப்பு இப்போது இணையதளத்தாலும். கலிகாலமில்லை, கணினிக்காலமிது.

எதிரின ஈர்ப்பில்லா உயிரினமேது, நேர்பார்வை வல இடப் புறமாய்ப் போவதும், கணப் பொழுதில் கண்களில் பதிந்த உருவம் மனதிலேறி மாயங்கள் செய்வதும் ஈர்ப்பில் வரும் விருப்பே. அற்புதப் படைப்பு ஆண்டவனின் படைப்பு.

தொலைதூரமெனினும், தொட்டுப் பேச வாய்ப்பில்லையெனினும், கடல் கடந்தெனினும், நேரில் காணக் கூடாதெனினும், உணர்வுகளைத் தூதாய்த் தூக்கிச் செல்லும் முகநூல் தூது கணினி காலத் தூது, இணையதளத் தூது

உறவினில் நாடலுண்டு, தேடலுண்டு, மகிழ்வுண்டு, கவலையுண்டு, சீண்டலுண்டு, சிணுங்கலுண்டு, வாதமுண்டு, விதண்டாவாதமுமுண்டு, சொற்போருண்டு, மற்போருமுண்டு, தழுவலுண்டு, நழுவலுமுண்டு மொத்தத்தில் உரிமையுண்டு

அழைப்புகள் ஆயிரம் வந்திடினும் எண்ணத்தில் பதிந்த எண்ணெனில் செவியில் தானாய்ப் பொருந்திக்கொள்கிறதே அலைபேசி. குறுஞ்செய்திகள் குறைவின்றித் தந்திடினும் குறிப்பிட்ட குறுஞ்செய்திக்குப் பதிலளிக்கப் பத்து விரல்களும் பாய்ந்து செல்கிறதே அலைபேசியின் எழுத்துக்கள் நோக்கி.

கவியில் கவரப்பட்டாள் காதலியானாள், காதலி கிட்டிய பின் தத்துவக் கவி காதல் கவியாய் மாறியதில் வியப்பேது. கவிக் காதலியே என் கவி காதல் ஒன்றிலேயே களித்திருக்கட்டும், தத்துவக் கவிக்குத் தாவ வைத்திடாதே. கனிவாயிரு கவியின் காதலியே.

சிறு விழிகளின் சீரிய பார்வையில்தான் எத்தனை எத்தனை காட்சிகளும் உருவங்களும், அத்தனையும் பதிவதில்லை அன்பால் ஈர்த்த ஒன்றைத் தவிர.






எதிர்வாதம் செய்திடினும் நீ எதிரியல்ல, விதண்டாவாதம் செய்திடினும் விரோதியல்ல, வாதப்பிரதி வாதங்களால் வாயடைக்கச் செய்தாலும் வாய்மையின் விளக்கம் நீ . உரையாடல் உறைந்திடலாம் உள்ளுணர்வு உறைந்திடாது. என் உள உந்துதல் உன் உண்மைச் சிரிப்பால்

இறுக்கமும் உருக்கமும் இருக்கும் உறவில் நெருக்கம் நீங்காதிருக்கும்

அன்பின் அதீத வெளிப்பாடு சினம், சினத்தால் சிதறுவது மனம், சிதறிய மனம் சிதைந்தால் தேடுவது மரணம்

ஆடிவரும் மயிலின் அழகிலொரு இலயிப்பில்லை, கருங்குயிலின் கானத்திலொரு களிப்பில்லை, மூடி வரும் மேகத்திலொரு மோகமில்லை, தேடி வரும் தென்றலிலொரு குளுமையில்லை. பெண்ணே உன் இருவிழி அசைவில் மட்டும் ஏனிந்த ஈர்ப்பு.
  
அழகில் வரும் பிணைப்பினிலும் அன்பு அடித்தளமாகிறதே, அன்பு நிலை கொள்ளா அழகுப் பிணைப்பிற்கு ஆயுள் அதிகமில்லையே.

நம் காதல் வீரியத்தின் முன் சூரியச் சூடும் குளிராகுதடி, உன் தொடுதலில் நிலவின் குளிரும் சூடாகுதடி, என் நினைப்பை வதைக்கும் உன் வனப்பு எவரிடமும் இல்லையடி, உன் கரம் பற்றி கால் நடந்தால் தொலைவும் தெரியாதடி, அதிசயமடி நீ எனக்கு

வழக்கங்கள் மாறி, பழக்கங்கள் மாறி, நடையுடை மாறி, பெற்றோரிடம் அளவளாவுதல் குறைந்து, அலைபேசிப் பேச்சும் குறுஞ்செய்தியும் அதிகமாகி, தனித்திருத்தலில் தனி சுகம் வருமெனில் அது காதலும் காமமும் சிந்தையில் செய்யும் கிளர்ச்சியே.





காதல் தேடல் : பதினெட்டிலொரு பருவத் தேடல், இருபத்தைந்திலொரு இளந் தேடல், முப்பதிலொரு முழுமைத் தேடல், நாற்பதிலொரு நயமான தேடல், ஐம்பதிலொரு ஆசுவாசத் தேடல், அறுபதிலொரு அழுகைத் தேடல், எழுபதிலும் தேடல், எண்பதிலும் தேடல் தேடலோ தேடல், தேடியது கிடைத்ததா ? வேறென்ன அன்புதான்
. 
விளக்கம் தெரியா வாழ்க்கையிருளில் விளக்காய் வந்த பெண்ணே, விளக்கம் கண்டேன் வாழ்வின் விளக்கமே நீதான் என. அலைபாய்ந்த நெஞ்சம் இனி அமைதியுறும் உன் விழி  பார்த்து, தடம் மாறிய கால்கள் இனி பின் செல்லும் நீ முன் வைத்த பாதங்களில் பதிந்து. விரக்திக் கவி இனி எதற்கு கண்ணே, காதல் கவி சொல்கிறேன் காதிலே, நம் கைகள் பிணைத்தபடி

உன் விழி தந்த கிறக்கம் என் இமை தேடும் உறக்கத்தைக் கொல்கிறதே, பார்க்கும் விழிகளெல்லாம் எனை ஈர்க்கவில்லையே, காந்தத்தைக் கண்களில் கோர்த்து நீ தேடிய சிறப்பான இரும்பு நானாகிப் போனேனே, வெகுதூரம் சென்றாயே, விரைவில் வா இரும்பு துரும்பாகுமுன்
இரவுக்கு வருமா உறக்கம் இல்லை பகலுக்குத்தான் வருமா தூக்கம் காதலுக்கு மட்டும் வருமோ நித்திரை.

இதழ்கள் இரண்டு இணைந்தாலது பேச்சு , இரண்டு நான்காகிப் பிணைந்தால் வருமே முத்தப் பெருமூச்சு

கருவிழிக்குள் கடலைக் கொண்டிருக்கும் ம்ங்கையிவள் அழுகையில் சுனாமியின் சுவடே இல்லையே. 

மனம் இரங்கி வருவது பச்சாதாபக் காதல், மனம் கிறங்கி வருவது மோகக் காதல், பணம் களத்திலறங்கினால் அது பகட்டுக் காதல், டாப்பப்பு செய்தே போண்டியானால் அது அலைபேசிக் காதல், உள்ளம் உருக்கி வருவதே உத்தமக் காதல்





காதல் பித்து தெளிய தத்துவப் பித்தனாகி தத்துவக் கவி தொடங்கிடினும் அங்கும் அன்பு மையப் படுகிறதே. தத்துவப் பித்து, சமூகப் பித்தென எப்பித்திலும் அன்பு அங்கமாகிறதே

அலைபேசியில் அசடு வழிந்து, குறுஞ்செய்தியில் குளறுபடி செய்து, நேரில் நாணி, அணைப்பில் மெய்மறந்து பின் பிரிந்து சென்றாலும் காதல் தந்த ரணம் மறையுமோ மரணம் வரை


இருகை விரல்கள் தாளம் போடுது கீபோர்டில், காதல் வார்த்தைகள் தெரியுது மானிட்டரில், இணையதளம் அனுப்புது தூதுவன் போல். பேப்பரும் பேனாவும் இப்போ காட்சிப் பொருள் போல்.

சுரிதார் சுமக்கும் சுந்தரியே, புடவை போர்த்தும் பெண்ணே, ஜீன்சில் நெளியும் நங்கையே, நாணி நிற்கிறேன் காதல் சொல்ல. ஒருபுறக் காதலை இருபுறக் காதலாய் மாற்றுவாயா இல்லை என்னவன் ஒருவன் இருக்கிறான் என ஏமாற்றம் தருவாயா தமிழ்ப் பெண்ணே. உன் பதில் ஏமாற்ற்மளித்தால் மாண்டு போக நான் என்ன மடையனா, வேறொரு மங்கையிடம் விண்ணப்பம் தருவேன், சட்டெனச் சொல் எப்பதிலையும்.

மலை பிளக்கும் பூகம்பமாய் என் மனம் பிளந்த மங்கையே திரும்பி வா தென்றலாய், விரும்பி வா வசந்தமாய், மீண்டும் வா மருந்தாய் பிளந்த நெஞ்சை ஒன்று சேர்க்க.

பெற்றோரைப் புறந்தள்ளி, மற்றோரை உள்வாங்கி, சகோதரர் சத்துருவாகி, நினைவெல்லாம் ஒரே நினைவாகி, மயங்கித் திரிவதே காதல். அக்காலம், இக்காலம், எக்காலத்திலும் காதல் செய்யும் களியாட்டம் இதுவே.

விழிகள் சேராமல், பொது மொழியில் அளவளாவி, தூது இன்றி, தொடுதல் இன்றி, மனக் கிளர்ச்சி தூண்டி, கடல் தாண்டி, மலை தாண்டி, நாடு தாண்டி, கண்டமும் தாண்டி இதயங்களை இணைக்கிறது இன்றைய காதலாம் இணையதளக் காதல்

உறவுக்குப் பாலமும், ஏணியும் ஏன், அன்பின் ஈர்ப்பும், மன உந்துதலும் விந்தை செய்திடுமே


2 comments:

  1. அடேயப்பா!!!!! அருமை!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி, மிக்க மகிழ்ச்சி ராஜேசுவரி

      Delete