வாழ்க்கை




பெற்றோர் பாசம் காலமாகி
உற்றோர் நேசம் மறைய
வியாதி விருப்பமாய் வந்து சேர
சுகம் தூரமாய் விலகியோட
களிப்பு காணாமல் போய்
கவலை கனமாய்க் கூடு கட்ட
முதுமையெனும் கட்டாயக் காலத்தில்
கடவுளைக் கூப்பிடுகிறான்
கவலைக்கெனப் பிறந்த மானிடன்.







உளவியலாளரும் உளறுவர் 
தன் உளம் உணர ஒரு உளம் இல்லையெனில்.
உளவியல் படித்த உளவியலாளிக்கும் 
உளவியல் படிக்கா சாமானியனுக்கும்
இதுவே உலகமறிந்த உளவியல்.










சதியின் பங்கு பொங்கி அழித்தொழிக்கையில் 
விதியின் விளையாட்டு இதுவென 
வியாக்கியானம் பேசும் விந்தை உலகம். 
மதியால் சதியை வீழச் செய்
விதியெனும் வாய்ப் பாட்டு விலகியோடும்.


                                                                           




காசு கண்டால் கம்யூனிச சிந்தனை சிதறும், 
செல்வம் சேர்ந்தால் சோசலிசம் சொல்லாமல் போகும்,
மனிதத்தில் பேசும் மானிடன் மணியில் பேசுவான். 
பணத்திற்கேது சித்தாந்தமும் வேதாந்தமும். 


                                        

                                       

அன்பிற்கு அணை ஆணவம், ஆன்மீகத்திற்கு அணை ஆஸ்தி, இல்லறத்திற்கு அணை இடைவெளி, ஈகைக்கு அணை மனமின்மை, உறவுக்கு அணை பொய்மை, ஊக்கத்துக்கு அணை நெஞ்சுரமின்மை. எல்லா அணைகளும் உடைக்க வல்லது ஏற்றமிகு பிள்ளை உள்ளம்.







காலத்தை மிச்சப் படுத்த காதில் செல் போனோடு காரோட்டும் பைக் ஓட்டும் கனவான்களே கனவாட்டிகளே காலனும் உங்கள் காலத்தை மிச்சப் படுத்தலாம். காலனின் கையில் காலத்தைக் கொடாமிலிருக்க காதிலிருந்து செல்போன் எடு.





மனது, இன்பம் ஒன்றே வர ஒருவழிச் சாலையா, இல்லை இல்லை இன்பமும் துன்பமும் வந்து போகும் இருவழிச் சாலையது

வாழ்க்கைத் தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கியவர் எவருமில்லை. இளமையில் காதல் பாடமும் தேர்வும், காதல் கனிந்து இல்லை கசந்து குடும்பப் பாடமும் தேர்வும், அதுவும் கசந்து ஆன்மீகப் பாடமும் தேர்வும். பாவம் மனிதன், இத்தனை தேர்வு வைத்த இறைவனின் தேர்வில் வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. இறைவனும்  காத்திருக்கிறான் தேர்ச்சி பெறும் மானிடனைக் காண

இசையில் இலயித்திருந்தேன் இலகுவாயிருந்தது இதயம், கவியில் கவனம் பதித்தேன் கனக்கிறதே கண்ணதாசனே.

ஆறறிவு பெற்ற மனிதனின் ஆறடி முடிவை ஈரடியில் சொன்னாலும் நூறடியில் சொன்னாலும் பணம், பவிசு, பதவி, மதம் எனும் நான்கடுக்கில் நுழைந்து நாசமாய்ப் போவேன் என அடம் பிடிக்கிறான்.. அடிக்கணக்கில் நம்பிக்கையில்லா மனிதனின் அடுக்குக் கணக்கே தனி

உலகம் உனக்களிக்கும் வாய்ப்புகளும், வளங்களும் அளப்பரியன, பின்னும் ஏன் விதியை நொந்து, வறுமையில் வீழ்ந்து மனமுறிவடைகிறாய் மானிடனே,. உள்ளத்தில் உரமேற்றி உறுதியுடன் உழைத்து உழைப்பின் பயன் பெறுவாய்.. காதலும் காமமும் கடமையின் பின்பே என்பதுனது மந்திரமாகட்டும்.






இருப்பதில் இன்பம் தேடும் மனிதர் எண்ணிலடங்குவர், இல்லாததற்கு ஏங்கும் எண்ணிலடங்கா மனிதர் தம் இயலாமையின் வெளிப்பாடே பகட்டும் படாடோபமும், தன் துதி பாடலும் தனக்கடுத்தோரைத் துச்சமெனத் தூற்றும் தரமின்மையும். . மாய மனிதனின் மாய எண்ணங்களில் முதன்மை எண்ணம் இதுவே.

தன் முகம் மறைத்துப் போலி முகம் காட்டிக் கடலை போட்டுக் கையும் களவுமாய்ப் பிடிபட்டுக் கம்பி எண்ணப் போகும் மன்மதர்களையும், ரதிகளையும் முகநூல் மார்க்கு மன்னிப்பாராக

பாசத்தைப் பகிர்ந்தளிக்கச் சொல்லும் பணமிருப்போர் ஏனோ பணத்தைப் பகிர்ந்தளிக்கச் சொல்லுவதில்லை. மேடைப் பேச்சினிலும், ஆன்மீகப் பிரசங்கத்திலும் பாசத்தைப் பொழியும் பலரிடம் பணம் கேள், பகையாவர் அவர் உனக்கு.

உலகம் உனக்களிக்கும் வாய்ப்புகளும், வளங்களும் அளப்பரியன, பின்னும் ஏன் விதியை நொந்து, வறுமையில் வீழ்ந்து மனமுறிவடைகிறாய் மானிடனே. உள்ளத்தில் உரமேற்றி உறுதியுடன் உழைத்து, உழைப்பின் பயன் பெறுவாய். காதலும் காமமும் கடமையின் பின்பே என்பதுனது மந்திரமாகட்டும்

வயதானால் வாலிபம் தேடும் மானிடன்  தன் வாலிப விளையாட்டைக் கண்ணுற்றால் காணாமல் போகும் வயதும், வாலிபமும், வயோதிகமும். தேடினாலும் கிட்டாததொரு அன்பெனும் தேனைக் கண்டடைவான், தேறுதலும் பெறுவான்.



பணம் என்னவெல்லாம் செய்கிறது, எதையெல்லாம் பெற்றுத் தருகிறது. துரோகியைத் தலைவனாக்குகிறது, சகுனிகளைக் கும்பிடச் செய்கிறது, அறிவிலியை அரசியலுக்கிழுத்து மக்களை அடிமைகொள்ளச் செய்கிறது, மடையனைக் கல்லூரிகள் கட்டச் செய்கிறது, பகல்வேஷக் காரனைப் பத்திரிக்கை நடத்தச் செய்கிறது, சின்னப்புத்திக்காரனைச் சின்னத்திரை நிலையம் நடத்தச் செய்கிறது. மொத்தத்தில் நாட்டை விழுங்கி நாசமாக்க முழு உரிமை கொடுக்கிறது நல்மனமில்லாக் கல்மனத்தோற்கு.

இப்படித்தான் பணம் பெறவேண்டும் என்ற நிலை மாற்றி எப்படியும் பணம் பெறுவேன் என்றெண்ணுபவனே ஏற்றம் பெறுகிறான், அரசியலில் புது அவதாரமெடுக்கிறான், அள்ளக்கைகளுக்கு எஜமானுமாகிறான்.

உலகை உன்னால் மாற்ற முடியுமா, மாற்றமென்றால் எதுவென முடிவு செய்வதற்குள் உன் முடிவு வந்திடும். உணர்ச்சியென்பது உன் உயிர் உடம்பிலிருக்கும் வரை. மாற்றமென்பது எதுவென தடுமாற்றமில்லா தீர்ப்பை உன் மனம் சொல்லட்டும்

காற்றது மெலிதாய்க் கடந்தால் கடற்காற்று, கடுமையாய்க் கடந்தாலது புயற்காற்று. இனிய சொல்லில் மெல்லிய குளிர் தரும் கடற்காற்றாவோம். இனிமைக்கு இருகைகுவிப்போம், கடுமையைக் காவலிடுவோம்.

ஆண் பெண்ணாயும் பெண் ஆணாயும் வேடம் தரித்துத் திரியும் முகநூல் தளத்தினிலே வேடம் தரித்தல் தந்த பயனென்ன, காவல்துறையின் கண்காணிப்பும் நிம்மதியில்லா உறக்கமும்.. நீ நீயாயிரு, மாறுவேடம் தரித்தலினும் மாண்டுபோவது மேல்.

கலக்கத்தைத் தைரியத்தில் தொலைத்துவிடு, மனப்புழுக்கத்தை மழுங்கச் செய், மயங்கியிரு அன்புள்ளங்களில், ஏழையாயிரு, கோழையாயிராதே

முகநூலில் முழுகி முத்தெடுக்க முனைந்தோர் பலர். முத்துக்குப் பதில் சொத்தைப் பாசிகளையும், முகம் மறைத்த திமிங்கிலங்களையும் கண்டு கலக்கமுற்று கண்ணீர் வடித்தும் இன்னமும் முழுகி முழுகித் தேடிகொண்டுதானிருக்கிறார்கள். முத்து முகம் காட்டுமா இல்லை முத்து போல் முகமூடியணிந்து பயம் காட்டுமா, முகநூல் மார்க்குக்கே வெளிச்சம்.
  
அரிதாரம் பூசி அரைகுறை அன்புடன் நடமாடும் மானிடரில் நல்மனம் பெற்றோர் அரிது, நல்மனம் பெற்ற மனதினைப் பற்றிடல் அரிதினும் அரிது





இப்படித்தான் பணம் பெறவேண்டும் என்ற நிலை மாற்றி எப்படியும் பணம் பெறுவேன் என்றெண்ணுபவனே ஏற்றம் பெறுகிறான், அரசியலில் புது அவதாரமெடுக்கிறான், அள்ளக்கைகளுக்கு எஜமானுமாகிறான்.

உலகை உன்னால் மாற்ற முடியுமா, மாற்றமென்றால் எதுவென முடிவு செய்வதற்குள் உன் முடிவு வந்திடும். உணர்ச்சியென்பது உன் உயிர் உடம்பிலிருக்கும் வரை. மாற்றமென்பது எதுவென தடுமாற்றமில்லா தீர்ப்பை உன் மனம் சொல்லட்டும்

காற்றது மெலிதாய்க் கடந்தால் கடற்காற்று, கடுமையாய்க் கடந்தாலது புயற்காற்று. இனிய சொல்லில் மெல்லிய குளிர் தரும் கடற்காற்றாவோம். இனிமைக்கு இருகைகுவிப்போம், கடுமையைக் காவலிடுவோம்.

ஆண் பெண்ணாயும் பெண் ஆணாயும் வேடம் தரித்துத் திரியும் முகநூல் தளத்தினிலே வேடம் தரித்தல் தந்த பயனென்ன, காவல்துறையின் கண்காணிப்பும் நிம்மதியில்லா உறக்கமும்.. நீ நீயாயிரு, மாறுவேடம் தரித்தலினும் மாண்டுபோவது மேல்.

கலக்கத்தைத் தைரியத்தில் தொலைத்துவிடு, மனப்புழுக்கத்தை மழுங்கச் செய், மயங்கியிரு அன்புள்ளங்களில், ஏழையாயிரு, கோழையாயிராதே

முகநூலில் முழுகி முத்தெடுக்க முனைந்தோர் பலர். முத்துக்குப் பதில் சொத்தைப் பாசிகளையும், முகம் மறைத்த திமிங்கிலங்களையும் கண்டு கலக்கமுற்று கண்ணீர் வடித்தும் இன்னமும் முழுகி முழுகித் தேடிகொண்டுதானிருக்கிறார்கள். முத்து முகம் காட்டுமா இல்லை முத்து போல் முகமூடியணிந்து பயம் காட்டுமா, முகநூல் மார்க்குக்கே வெளிச்சம்.





அன்பாயிரு, ஆளுகை செய் அன்பிலே ,இயல்பாயிரு, ஈகையாயிரு, உலகத்திலிரு, ஊருக்குபதேசம் செய்யாதே, எதையும் மறைக்காதே, ஏற்றம் கொள், ஐயப் படாதே, ஒளிக்காதே உன்னை, ஓராயிரம் வரினும் துன்பப் படாதே, ஔஷதம் உன் மனதிலே, ஃதே வாழ்வு

பணமிருந்தால் பந்தம், சொத்திருந்தால் சொந்தம், காசிருந்தால் காக்கைக் கூட்டம், நகையிருந்தால் பகட்டு, மனமிருந்தால் நட்பு

பணமா மனமா ? பணம் என்போர் பலர், மனம் என்போர் மிகச் சிலர்

கவிதையிலே விதை உண்டு, தமிழ்க்களத்தில் விதை விதைத்து கவிதை பெறுவோம் தாரளமாய், ஏராளமாய்.

வாழ்வொரு பயணம், கவலைச் சுமைகளேற்றி களிப்பில்லா பயணம் தொடருவதினும் சுமைகளகற்றி சுகமான பயணம் போவோம் முடியும் இடமாம் மரணம் வரை.

பணக் கலப்பில்லா, பதவிசுக் கலப்பில்லா, பகட்டுக் கலப்பில்லா பாசத்தை மனிதரிடம் எதிர்பார்த்து ஏமாந்து வளர்ப்புப் பிராணியிடம் கலப்பில்லாப் பாசம் வாய்பேசாப் பிராணியிடம் தாராளப் பாசம் பெறுவோரின் எண்ணிக்கை ஏராளம் இவ்வுலகில்.

தமிழால் தழைப்போம், தமிழனென்று தலை நிமிர்வோம், ஆயிரம் மொழிகள் கற்றிடினும் ஆயிரத்தில் ஒன்றன்று ஆயிரத்தில் முதல்வன் எம் தமிழ் மொழி எனப் பெருமிதம் கொள்வோம்.

தமிழை வளர்த்தோர், தமிழால் தழைத்தோர், தமிழைப் பாடியோர், தமிழால் பணம் பண்ணியோர், தமிழுக்கு உயிர் கொடுத்தோர், தமிழனின் உயிர் வாங்குவோர், பட்டியலிட்டால் பாதி உயிர் போகும்.


மனதுரைப்பதை கையேற்று பத்து விரல்கள் கீபோர்டில் பரவி ஸ்டேட்டசாகி துதிபாடலும் வசைபாடலும் பதிவாகி பேஸ்புக்கில் பிரபலமாகி முகநூல் மார்க்கிடம் மார்க்கும் பெறா ஒரு விந்தைத் தேர்விது. இது புது உலகம் மன மயக்கம் தரும் முகநூல் உலகம்.

பணம் தேடா மனிதரில்லை, பணம் மட்டும் தேடுபவன் மனிதனில்லை.

தித்தித்திடும் தத்தைத் தமிழுக்குத் தீது செய்தனரே தமிழால் தழைத்த தமிழனல்லாதோர், பெரும் பணம் ஈட்டினரே ஈனர்கள் தாய்த் தமிழின் பெயரால். இன்றே தீது செய் என் தமிழே, திருடருக்கு.

முகநூலெனும் புது சமூகத்தில் புகுந்திருக்கிறோம். படைக்கிறோம் பணம் பெறாமல், கவி வடிக்கிறோம் காசு கேட்காமல், சிந்தையில் சில்லறை நினைவின்றி அன்பை அர்ப்பணிக்கிறோம் நட்புகளுக்கு. 

கணினிக்குள் காலமெல்லாம் புதைந்து காசு தேடும் காலம், முகநூலில் முகம் புதைத்து முகம் தேடி, கண்ட முகம் ஒரு பொய்முகம் என்பதறிந்து முனகல் ஸ்டேடஸ் போடும் காலம். கற்காலம் போய் கணினிக் காலம் வந்தாலும் தேடுதல் என்னவோ தொடர்கிறது.
சொந்தம் சூது செய்யும், சுற்றம் சுழற்றி விடும், பந்தம் பற்ற வைக்கும், நட்பே நன்மை நல்கும்.

இரக்கம் இன்னும் இறக்கவில்லை, காதல் காலமாகவில்லை, அன்பு அழியவில்லை, பாசம் புதைபடவில்லை. நட்பினில் நான்கும் பிணைந்துதானிருக்கிறது.

பிறக்குமுன்னே கருவினில் உயிர் தந்து, உணர்வு தந்து, உணவு தந்து, உறவும் தந்த தாயின் அருமையை, பெருமையைப் போற்றுவோம்





ஆதிக்கம் நிற்காது அதிகநாள், பண பலம் பலமிழக்குமோர் நாள், கர்வம் கனவீனமடையும் இன்னொரு கர்வத்தின் முன், அழகில் வந்த மமதை அழியும் உடல் பலவீனத்தில், கல்விச் செருக்கு படிக்காதவனின் பணம் முன் தோற்கும். அன்பென்பதே அகிலத்தை ஆளும

பணத்தில் பற்றற்றவனைப் பணம் பகைக்கும், பாரா முகம் காட்டும், கோடி கோடியாய்க் குவித்துக் கேடியான பணப் பசியுடையோனை அப்பணமும் நேசிக்கும், காதலிக்கும், கரன்சிகளாய் அவன் வீட்டுக் கஜானாவில் காலம் காலமாய்த் தங்கிக் களித்திருக்கும் பணம் பணம் பணம்





.மணமாகா வாழ்வொரு கற்பனை வாழ்வு, மணமான வாழ்வொரு கவலை வாழ்வு, சிங்கிளா இருப்பதே சிறந்த வாழ்வு.

நீதிமன்ற வழக்குக்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மானிடர் ஏனோ மனமெனும் மகாமன்றத்தின் தீர்ப்பைக் கேட்பதில்லை..

.அரசியலுக்குத் தேவை, ஆன்மீகத்துக்குத் தேவை, இல்லறத்துக்குத் தேவை, ஈகைக்குத் தேவை, உயர்வுக்குத் தேவை, ஊக்கத்துக்குத் தேவை, எனக்குத் தேவை, ஏழைக்குத் தேவை, ஐங்கண்டங்களுக்குத் தேவை, ஒய்யாரத்துக்குத் தேவை, ஓங்கி ஒலிக்கத் தேவை, ஔடதத்துக்கும் தேவை ஃதே பணம்

ஒருவனின் அறியாமை இன்னொருவனின் ஆதாயம், ஒருவனின் மடமை மற்றவனுக்கு மகத்துவம், ஒருவனின் ஏழ்மை அடுத்தவனின் ஏற்றம், தமிழனின் தகுதியின்மை தறுதலைகளுக்குப் பதவி.

குழந்தையில் மழலைக் கதை கேட்டு வாலிபத்தில் காதல் கதை காதில் வாங்கி வயோதிகத்தில் வருத்தக் கதை சொல்லி கதையும் முடிகிறது

பணம் புழங்கினால் தத்துவத்திற்கேது இடம், பணமின்றி மனம் புழுங்கினால் நித்திரைக்கேது இடம். புழக்கத்தால் புழுக்கத்தால் மாறுகிறதே வாழ்க்கைத் தடம்.

பணத்தைப் பகிர்ந்தளி, பெற்றுக் கொள்ள பலர், பாசத்தைப் பகிர்ந்தளி, ஏற்றுக் கொள்ள சிலரே. உறவின் ஊக்கத்திற்கு உறுதுணை செய்கிற பணம் உண்மை உறையவும  உதவுகிறதே, அரசியல் அரக்கர்களுக்குப் பதவியும் தருகிறதே. இயங்குதே இவ்வுலகம் பணத்தாலே.

மனிதனொரு மாயக்காரன், ஆறறிவு கொண்டு ஏற்புடைய வேடம் தரித்து, பொய்யிலே பிழைத்து, உண்மையைப் புதைத்து தன் மனமன்றி பிறர் அறியாப் போலி வாழ்வில் உழண்டு, வேடம் தரிக்கத் தெரியா விசுவாசமான விலங்கினும் வேறுபட்டு உலக விடுதலையும் பெறுகிறான்.









இதயத்தைத் திருடுஇசையைத் திருடாதே
காதலைக் கூட களவு கொள்கவியைக் களவு கொள்ளாதே.


சுட்டதைப் படைத்தவரின் பெயரின்றிப் பெருமையுடன் பகிரும் பெண்டிரும், ஆக்கியோரின் அனுமதியின்றி அழ்காய் அபேஸ் செய்து பதியும் ஆடவரும் நிறைந்திருக்கும் முகநூல் ஒரு களவுக்கூடமே.  களவுப் பதிவில் கமன்டு வாங்கும் களவாணிகளுக்கோ தற்பெருமை, உருவாக்கியவனுக்கோ உள்ளூர வருமே நகைப்பு. களவுப் பதிவேற்றும் கள்வர்களின் சமூக, அரசியல் சிந்தனையை நினைத்தாலே வருமே வாய்கொள்ளாச் சிரிப்பு..

மனதில் சுமந்த கவலைகளை வார்த்தைகளாக்கி, வரிகளாக்கி, கவியாக்கியோனின் கவியைக் கொள்ளையடிப்போனின் நிம்மதி கொள்ளை போகும், கவிஞன் சுமந்த கவலைகள் இவன் நெஞ்சில் குடிபுகும். கவிக் களவானி பொருட்களவாணியினும் நிந்தையடைவான்.










எளிமை ஏற்றம் தரும் இனிமை தரும் இன்ன பிற தரும், அழகு ஆச்சரியத்திலாழ்த்தி அலங்கோலமாக்கும், பகட்டு படாடோபம் தந்து பக்க விளைவு தரும், ஆணே பெண்ணே எளிமையாயிரு எட்டயபுரத்து பாரதி போலொரு ஏற்றம் பெறுவாய், பண்டிதனும் பலமுறை படித்து மெல்லப் புரியும்  தமிழ்ச் சொத்து எம் பாரதியின் கவிச் சொத்து.






No comments:

Post a Comment