கவிக்குக் கவி





எண்ணற்ற கவிகள் தந்து என் எண்ணத்தில் உறைந்தாய் , உன் சொல் வண்ணம் என் கவிக் காரணியானதே கண்ணதாசனே. திரைக் கவி தனிக் கவி என எக்கவியிலும் தனித்தளம் அமைத்த கவிப் பிறவியே, நின்னை நினையாத நாளில்லை.


முத்தையா என்ற கவிமுத்தே, கண்ணதாசன் என்ற கவிப் பிறப்பே, கடவுளின் கவிப் படைப்பு நீ, இறைவனின் இலக்கியப் படைப்பு நீ, ஆண்டவனின் அற்புதப் படைப்பு நீ


அரசியலை அதிர வைத்தவன், ஆர்ப்பரித்தவரை ஆட வைத்தவன், இல்லறத்தில் இல்லறத்தை மட்டும் சொல்லியவன், ஈன்ர்களை ஈனத்தனமின்றி உலகுக்குச் சொல்லியவன், உன்மத்தர்களை உண்மையாய் உலகுக்குச் சொல்லியவன், ஊளையிடுவோரை ஊளையிடாமல் ஊருக்கு உரைத்தவன், எண்ணங்களை எடுத்துரைத்தவன், ஏப்பமிடுவோரை ஏளனம் செய்தவன், ஐம்பொன் தரினும் ஐம்புலனும் அடக்கியவன், ஒவ்வாதவனுக்கு ஒவ்வாதவன், ஓரயிரம் கவி ஓரிடத்தில் தந்தவன், ஔவைக்கும் ஔவையவன், ஃதே கண்ணதாசத் தமிழன் ஃதே அவன் கவி.






வாழ்க்கைப் போராட்டம் தரும் வலிகளே வரிகளாகி கவியாகி காணக் கிடைக்குது, கவி படிப்போருக்குக் களிப்பும் கவி படைத்தோனுக்குக் கர்வமுமே கண்ட பலன்.


கவிக்கரசன் புனைந்த பாடல்கள் இசையில் இணைந்து செவியில் புகுந்து மனதில் பிணைந்து கவலை களைந்து கவி மயக்கம் தந்து தாலாட்டும் தருகிறதே.

கவி தா என்ற மறுகணம் கவி தரும் கவிச் சுரபியே, உன் கவிகள் பொற்கவிகளல்ல வைரக்கவிகள்.

கவிக்காகக் கண்ணதாசன் பிறந்தானா இல்லை கண்ணதாசனுக்காகக் கவி பிறந்ததா கண்ணதாசனுக்காகத்தான் கவியே பிறந்தது, வார்த்தைகளில் விபச்சாரம் செய்தவனில்லை கண்ணதாசன், வார்த்தைகளிலேது விபச்சாரம் என்போரே கவியைக் களவு கொள்வதென்பது வார்த்தை விபச்சாரமே, திரைக் கவி எழுதும் தமிழ்த் தணலுடையோரே கவியரசரின் கம்யூனிச, சோஷலிசப் பாதைகளின் அடியொற்றியே சமூக சிந்தனை கொள்க

கல்விக்கோர் காமராசர், கவிக்கோர் கண்ணதாசன், கொடைக்கோர் எம்ஜியார், நடிப்புக்கோர் சிவாஜி, நட்புத் தளத்துக்கோர் முகநூல்

கவிஞர் ஒரு காவியம் காவியத்தின் ஓவியம் கவிதைக் கடலில் ஒரு தென்றல், சீறினால் கவிதைச் சுனாமி

பண மயக்கத்தில் படுபாதகம் செய்வான், பதவி சுகத்தில் தாய்த் திருநாட்டையே தனதாக்கும் தகிடுதத்தம் செய்வான், பணமும் பதவியும் பெற்று அக்கால கொடுங்கோல் மன்னன் போல் அரசாளும் அசிங்க அரசியல் வியாதியை நினத்தாலே குமட்டுகிறது. ஊடகமென்று பேர் வைத்து ஊரை உலைக்குள் வைப்பான் உணர்வில்லா இதயமில்லா உன்மத்தன், பணம் பறிப்பான் பத்திரிகை நடத்தி, கடவுளே கவிமயக்கம் ஒன்றே கொடு எனக்கு, கவியரசரின் கவியில் மூழ்க





கவிக்கு அரசன் ஒருவனைக் காவு வாங்கியதே இந்த சினிமா உலகம். காதல், காமம், வாழ்க்கை, பிறப்பு, இறப்பு எத்தனை எத்தனை சுமைகள் ஒருவனின் தலையில், அத்தனையும் தாங்கிக் கொண்டு அன்னைத் தமிழில் அழகு கவி கொடுத்து ஐம்பத்து நான்கில் அவ்விடம் சென்றான். கேடி பில்லா ரங்காவிற்குக் கவியெழுதியிருந்தால் கோடி கோடியாய்க் குவித்திருப்பான். படமெடுத்து பாழும் பணம் தொலைத்தான் படாடோபமில்லாப் பாட்டுக்காரன். . அரசியிலில் அடிவைத்திருந்தால் ஆயிரம் கோடிக்கு அதிபதியாயிருப்பான், கள்ளத்தனம் மிக்க கபடக் கூத்தாடும் சினிமாவில் சிந்தனையெல்லாம் கொட்டி இவ்வுலகிலிருந்தும் காணாமல் போனான். வாழ்கிறான் கவிக்கு மயங்கும் எம்போல் தமிழர் மனதில். .

பணத்தைப் பகைத்தவனைப் பணம் பகைத்தது, பாழும் உலகும் பழித்தது. முதுமை அடையுமுன்னே முதுமையைக் கவியாய்த் தந்தான். வெள்ளந்திரியாய் வாழ்ந்தவன் பாசமற்ற உலகில் இறந்தான். எங்கள் இதய வலையில் சிக்கியவன் இன்னும் இறக்கவில்லை

கண்ணதாசனைக் கைகூப்பியும் கவி வரவில்லை, வாலியை வணங்கியும் வார்த்தை விழவில்லை . பாட்டெழுதுவோரே பாட்டெழுதுவோரே பாடல்களில் பரவசமில்லை, கவியில் காந்தமில்லை.                                    
கண்ணதாசனோடு கவி காலம் சென்றது, வாலியோடு வார்த்தை விளையாட்டு வீழ்ந்தது.. கண்ணதாசனின் கவியும் வாலியின் வார்த்தைகளும் போதும் எமக்கு.

கவியில் காசு பார்த்தோர் பலர், கவியில் கரைந்தவன் கவிக்கு அரசன் கண்ணதாசன். அரசியலில் இடம் பிடித்து சினிமாக் கவியில் சில்லரை சேர்த்தோர் பலர், அரசியலில் ஆள்காட்டி விரலை நீட்டிக் குற்றம் சொன்னவன் கவியரசன் கண்ணதாசன் . பணம் கொடுத்துப் பதவியைக் காட்டிப் பட்டங்கள் பெற்ற பாடலாசிரியர் பலர், தேடி வந்த பட்டம், பதவிகளை விருப்பில்லாமல் ஏற்றவன் கண்ணதாசன்.   தமிழ் உள்ளளவும்
தமிழ்க் கவி உள்ளளவும் வாழ்வான் கவிக்கரசன், தமிழர் தம் உள்ளங்களில்.

கவிக்கொரு கர்ணன் கவியரசன் கண்ணதாசன், இசைக்கொரு பாரி இசையரசன் இளையராசா

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்" என்றொரு பல்லவியைப் போட்டு சகுனிகளைக் கும்பிட்டு பணம் பண்ணும் பணப் பித்தர்கள் பலர் உளர் தாய்த் தமிழ்நாட்டில். பத்தாயிரம் பல்லவிகள் போட்ட கண்ணதாசனெனும் கவிக் கர்ணனுக்கொரு பொய்ப் பல்லவி தேவையன்று. கவிச் சுரங்கமே நெஞ்சார நினைவுறுகிறேன்.



                                        
                                   http://www.youtube.com/watch?v=VMmNLG7IvEE












No comments:

Post a Comment